< Back
மாநில செய்திகள்
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
18 Jan 2023 12:15 AM IST

தென்காசி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணைச் செயலாளர் சிவானந்த், நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட அவைத் தலைவர் பொய்கை மாரியப்பன், விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் காளிராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீவநல்லூர்

கடையநல்லூர் அருகே சீவநல்லூரில் நடந்த விழாவுக்கு செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆய்க்குடி செல்லப்பன் தலைமை தாங்கினார். கிளை கழக செயலாளர் செண்பகம் வரவேற்றார். கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடிக்கம்ப கல்வெட்டை திறந்து வைத்து, கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

அதன் பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அய்யாத்துரை பாண்டியன்

இதேபோல் குற்றாலத்தில் இருந்து இலஞ்சி செல்லும் மெயின் ரோட்டில் குமாரர் கோவில் செல்லும் திருப்பம் அருகில் எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்திற்கு தொழிலதிபர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அப்போது அய்யாத்துரை பாண்டியன் கூறுகையில், 'தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி உருவாக சபதம் ஏற்போம்' என்றார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலஇலந்தைகுளம்

மேலஇலந்தைகுளம் கிளை அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணைத்தலைவர் எஜமான் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதேபோல் வன்னிக்கோனேந்தல், தேவர்குளம், மூவிருந்தாளி, அச்சம்பட்டி, மருக்காலங்குளம், பனவடலிசத்திரம், திருமலாபுரம், ஆயாள்பட்டி, குருக்கள்பட்டி, மேலநீலிதநல்லூர், சண்முகநல்லூர், நடுவக்குறிச்சி ஆகிய ஊர்களில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வாசுதேவநல்லூர்-கீழப்பாவூர்

வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, தென்காசி வடக்கு மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. அ.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமை தாங்கினார். அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவபடத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பால்துரை, தமிழ் தலைமை கழக பேச்சாளர் அப்பாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்