நாமக்கல்
மேட்டூர் தண்ணீர் பரமத்திவேலூர் வந்தடைந்தது
|பரமத்திவேலூர்
காவிரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் இறுதி வரை அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்படும். ஜூலை மாதம் முதல் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி, ஆகஸ்டு மாதம் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி என பாசன தேவைக்கேற்ப அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பரமத்திவேலூர் வந்தடைந்ததையடுத்து பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.