தொடர்ந்து சரியும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்: கவலையில் டெல்டா விவசாயிகள்
|மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர்,
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 அடி அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும் பொழுது அங்கு உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரிவது வழக்கம்.
தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடி மட்டுமே உள்ளதால், இந்தப் புராதன சின்னங்கள் முழுமையாக வெளியே தெரிகிறது. இதன்படி ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலையும் கோபுரமும் வெளியே தெரிகின்றன. அதேபோல கிறிஸ்தவ ஆலய கோபுரமும் தற்போது வெளியே தெரிகிறது.
இதே நிலை தொடர்ந்தால் நீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு, விளைநிலங்கள் தரிசாகும் நிலைக்கு தள்ளப்படும் என டெல்டா பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கான நீரை உடனடியாக பெற மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.