< Back
மாநில செய்திகள்
3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
சேலம்
மாநில செய்திகள்

3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

தினத்தந்தி
|
8 Dec 2022 2:00 AM IST

இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

மேட்டூர், டிச.8-

இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

மேட்டூர் அணை

இந்த ஆண்டு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

சில மாதங்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து செப்டம்பர் மாதம் 23-ந் தேதி முதல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைய தொடங்கியது.

அதன்பிறகு அடுத்த இரு வாரங்களில் நீர்வரத்து அதிகரித்து, மீண்டும் 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 2-வது முறையாக அணை நிரம்பியது. அதாவது கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி அணை தனது முழு கொள்ளளவை எட்டி மீண்டும் நிரம்பி இருந்தது.

118 அடியாக குறைந்தது

பின்னர் கடந்த மாதம் 24-ந் தேதி வரை 120 அடி என்ற நிலையில் அணை நீர்மட்டம் நீடித்தது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த 25-ந்தேதி அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைந்தது. இது படிப்படியாக குறைந்து கொண்டே வந்து அணை நீர்மட்டம் 118 அடியை எட்டியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,600 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரத்து 460 கனஅடியாகவும், தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,600 கனஅடியாகவும் இருந்தது. மேலும் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 119.44 அடியாக இருந்தது.

3-வது முறையாக நிரம்பியது

பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 662 கனஅடியாக நேற்று அதிகரித்ததால் அணை நீர்மட்டமும் காலை 8 மணி நிலவரப்படி 119.88 அடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி மீண்டும் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரவு 7 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 600 கனஅடியாக இருந்தது. இந்த தண்ணீர் உபரிநீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் சுரங்க நீர்மின் நிலையம் வழியாகவும், வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்