< Back
மாநில செய்திகள்
340 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது
சேலம்
மாநில செய்திகள்

340 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது

தினத்தந்தி
|
18 Jun 2023 1:24 AM IST

340 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்ததுள்ளது

மேட்டூர்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 340 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் குறைந்துள்ளது.

மேட்டூர் அணை

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்துக்கு முன்னதாகவே அதாவது மே மாதத்திலே தொடங்கியது. இதன் காரணமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது.

இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் எதிரொலியாக அடுத்த ஒரு சில வாரங்களில் அணை நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

குடிநீர் தேவை

இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து பாசன தேவைக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு ஒரு சில நாட்களில் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதாவது வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதனிடையே அணையில் இருந்து பாசன தேவைக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்தானது குறைந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடிக்கு கீழ் சென்றது.

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பாசன தேவைக்காக முன்னதாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அன்று இரவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 1,000 கனஅடிக்கு கீழ் குறைந்தது.

100 அடிக்கு கீழ் குறைந்தது

இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று காலை அணையின் நீர்மட்டம் 100.29 அடியாக குறைந்தது. நள்ளிரவில் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது.

அதாவது 340 நாட்களுக்கு பிறகு அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த 2005-2006-ம் ஆண்டில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 428 நாட்களாக 100 அடிக்கு மேல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்