ஆம்புலன்ஸ் சேவையை பாதிக்கும் மெட்ரோ பணிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
|மெட்ரோ பணிக்காக பல சாலைகள் ஒருவழிப் பாதையாக்கப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னை மாநகர சாலைகளில் வளர்ச்சிப் பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் நிலையில், ஆம்புலன்ஸ் சேவைகள் தாமதமாகின்றன. சென்னை மாநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் காரணமாக பெரும்பாலான இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலை சீரமைப்பு பணிகள் ஒருபுறம், மெட்ரோ 2வது கட்ட பணிகள் என பிரதான சாலைகளில் தற்போது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதனால் அலுவல் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது வாகன விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.
இதனால் 108 சேவையில் ஆம்புலன்ஸ்களின் சராசரி பயண நேரம் மற்றும் வேகம் 75 சதவீதம் வரை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆம்புலன்ஸ்களின் பதில் நேரம் சாதாரண சாலைகளில் 8 நிமிடங்களில் இருந்து 14 நிமிடங்களாக உயர்ந்துள்ளது.
மெட்ரோ பணிக்காக பல சாலைகள் ஒருவழிப் பாதையாக்கப்பட்டுள்ளன. நெரிசல் மிகு நேரங்களில் தடையின்றி ஆம்புலன்ஸ் சேவையை வழங்க ஹாட்ஸ்பாட் பகுதிகளை கண்டறிந்து தேவையின் அடிப்படையில் கூடுதல் ஆம்புலன்ஸ்களை இயக்க தேவையான நடவடிக்கையை ஆம்புலன்ஸ் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.