சென்னை
திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து மாதவரம் வரை மெட்ரோ ரெயிலை நீட்டிக்க வேண்டும்; கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை
|திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து மாதவரம் வரை மெட்ரோ ரெயிலை நீட்டிக்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்தனர்.
சென்னை பெருநகர பகுதிக்கான மூன்றாம் முழுமை திட்டம் 2027, 2046-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கு திருவொற்றியூரில் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, பெருநகர சென்னை குழுமம் முதன்மை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி மற்றும் திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் சங்கரன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், கவுன்சிலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கண்டனர்.
கூட்டத்தி்ல் பங்கேற்ற பொதுமக்கள் தரப்பில், திருவொற்றியூர் மேற்கு பகுதியில் நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து சுகாதார மையம் மற்றும் பள்ளிக்கூடங்களை கட்ட வேண்டும். எண்ணூர் பகுதியில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். திருவொற்றியூர் விம்கோநகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மாதவரம் மெட்ரோ ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயிலை நீட்டிக்க வேண்டும். திருவொற்றியூரில் கட்டப்பட்டு வரும் புதிய மீன்பிடி துறைமுகத்தில் மீன் பதப்படுத்தும் குடோன் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்தனர்.