சென்னை
கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு - மெட்ரோ ரெயில்வே அறிவிப்பு
|மெட்ரோ ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எனவே, சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் மெட்ரோ ரெயில் சேவை இரவு 11 மணி வரை செயல்படும். ஆனால், இன்று கிரிக்கெட் போட்டி பார்த்துவிட்டு இரவு நேரம் திரும்பும் ரசிகர்களுக்காக மெட்ரோ ரெயில் சேவை ஒரு மணி நேரம் கூடுதலாக, இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்து திரும்பும்போது போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். போட்டிக்கு செல்லும்போது இந்த சலுகை கிடையாது.
நீல வழித்தடம்: அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில்நிலையத்திலிருந்து விமானநிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை ரெயில்நிலையம் நோக்கி இயக்கப்படும்.
பச்சை வழித்தடம்: சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை மெட்ரோ ரெயில்நிலையம் வரை 15 நிமிடம் இடைவௌியில் ரெயில்கள் இயக்கப்படும்.
இன்று இரவு 11 மணி முதல் 12 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான ரெயில் சேவை இயக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.