சென்னை
3-வது வழித்தடத்தில் உள்ள நேருநகர்- சிப்காட் இடையே 2027-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் சேவை
|3-வது வழித்தடத்தில் உள்ள நேரு நகர்- சிப்காட் இடையே 2027-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்றும், இது ஐ.டி. நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு பலன் கொடுக்கும் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் போக்குவரத்தில் மெட்ரோ ரெயில் சேவை முக்கிய அங்கம் வகித்து வருகிறது. பொதுமக்களின் தேவையை கருத்தில்கொண்டு பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவிலான 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில், 45.4 கி.மீ. தூரம் கொண்ட மாதவரம்- சிப்காட் இடையேயான 3-ம் வழித்தடத்தில் உள்ள 20 கி.மீ. தூரம் பகுதியாக வருகிறது.
3-ம் வழித்தடத்தில் இடம் பெற்றிருக்கும் தரமணி அருகே உள்ள நேரு நகரில் இருந்து சிறுசேரிக்கு வருகிற 2027-ம் ஆண்டு பகுதியாக ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அதாவது, நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி. காலனி, ஒக்கியம்பேட்டை, காரம்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் லேக் 1, சோழிங்கநல்லூர் லேக் 2, செம்மஞ்சேரி 1, செம்மஞ்சேரி 2, காந்தி நகர், நாவலூர், சிறுசேரி, சிறுசேரி சிப்காட் 1, சிறுசேரி சிப்காட் 2 ஆகிய வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
மாதவரம்- சிப்காட் இடையேயான 3-ம் வழித்தடத்தில் மாதவரத்தில் இருந்து தரமணி வரை பூமிக்கு அடியிலும், தரமணியில் இருந்து சிறுசேரி வரை உயர் மட்டத்திலும் பாதை அமைக்கப்படுகிறது. பூமிக்கு அடியில் செல்லும் இடங்களை விடவும், உயர் மட்டத்தில் செல்லும் வகையிலான பாதையில் கட்டுமான பணிகள் மேற்கொள்வது எளிதானதாக இருக்கிறது.
உயர்மட்ட பாதை செல்லும் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரை, சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை என 2 ஆக பிரித்து கட்டுமான பணிகளுக்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டிய பல்வேறு இடங்களில் கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. நேரு நகர் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான பாதையில் 2027-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிந்துவிடும். இதன்பின்னர் உடனடியாக சேவையை தொடங்க அதிகாரிகள் முடிவெடுத்து உள்ளனர்.
இந்த பகுதியில் ஐ.டி. கம்பெனிகள் ஏராளமாக உள்ளதால் தற்போது பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் ஆமை வேகத்திலேயே நகர்ந்து செல்ல முடிகிறது.
மெட்ரோ ரெயில் பயன்பாட்டுக்கு வந்தால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமைவதோடு, ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்குவதில் இருந்து நிவாரணம் அளித்து, அதிக பலன் கொடுப்பதாக இருக்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.