< Back
மாநில செய்திகள்
சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை - மெட்ரோ ரெயில் நிறுவனம் பணியை தொடங்கியது
சென்னை
மாநில செய்திகள்

சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை - மெட்ரோ ரெயில் நிறுவனம் பணியை தொடங்கியது

தினத்தந்தி
|
1 Dec 2022 5:17 PM IST

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனைக்காக மண் எடுக்கும் சவாலான பணி நேற்று தொடங்கியது.

மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் உயிரியல் பூங்கா வரிசையில் சென்னையின் மற்றொரு சுற்றுலாத்தலம் சேத்துப்பட்டு பசுமைப்பூங்கா. மீன் வளத்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.42 கோடியில் சுற்றுச்சூழல் பசுமைப்பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பொழுதுபோக்கு அம்சமாக தூண்டில் மீன் பிடிப்பு, படகு சவாரி, 1.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபயிற்சி தளங்கள், ஊடக மையம், சிறுவர் விளையாட்டு பூங்கா, மகரந்தப்பூங்கா, 3-டி 'விர்ச்சுவல்' திரையரங்கு ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஏரியில் உள்நாட்டு வகை மீன் இனங்களுடன், இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு, மிர்கால், பங்கேசியஸ் மீன் இனங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பசுமைப்பூங்காவை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்துவைத்தார். இந்த பசுமைப்பூங்காவின் இயற்கை சூழலால் பூங்காவுக்கு வருகை புரியும் அரியவகைப் பறவைகளின் எண்ணிக்கையும், பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

மாநகரின் மத்திய பகுதியில் உள்ள கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம், சேத்துப்பட்டு ரெயில் நிலையம் என எளிதில் மக்கள் வந்து செல்லும் வகையில் உள்ள, சேத்துப்பட்டு ஏரிக்கு கீழ் பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் 2 வழிப்பாதையை தொடர்ந்து, தற்போது மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயிலுக்கான பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இதில் மாதவரம் முதல் சிப்காட் வரையில் 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் 3-வது வழித்தடம் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகளை இணைக்கும் முக்கியமான வடக்கு தெற்கு வழித்தடமாகும். இந்தப்பாதையில் தகவல் தொழில்நுட்ப வழித்தடம், அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைப்பதுடன், உயர்த்தப்பட்ட பாதையில் 20 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 30 ரெயில் நிலையங்கள் என 50 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இந்தப்பாதையில் அடையாறு ஆறு மற்றும் சேத்துப்பட்டு ஏரிக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை சவாலான பணியாக கருதப்படுகிறது.

அடையாறு ஆறுக்கு அடியில் இம்மாதம் 2-வது வாரத்தில் பணிகள் தொடங்க இருக்கிறது. கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி மற்றும் சேத்துப்பட்டு மெட்ரோ என 2 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் நடுவில் சேத்துப்பட்டு ஏரி வருகிறது. இந்த ஏரியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணிகள் நேற்று தொடங்கியது.

இதில் ஏரியில் 2 இடங்களில் 120 அடி ஆழத்தில் (35 மீட்டர்) 2 குழிகள் தோண்டும் பணி தொடங்கி உள்ளது. அதில் இருந்து மாதிரி மண் எடுக்கப்பட்டு ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, மண்ணின் உறுதி தன்மை அறியப்படுகிறது. அதனை தொடர்ந்து சுரங்கம் தோண்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்தப்பணியில் எல்.ஆண்டு டி. நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்