'பாசிச ஆட்சியை வீழ்த்த தி.மு.க.வுடன் இணைந்து களமாடும் கமல்ஹாசனை சந்தித்தேன்' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
|கமல்ஹாசனை சந்தித்து தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
மக்களவை தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
"முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழை நேசித்து அவரிடமே 'கலைஞானி' என்று பட்டம் பெற்றவர், சமத்துவமும் பகுத்தறிவும் அரசியல் பார்வையாகக் கொண்டிருப்பவர், மதவெறி-மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட இந்தியா கூட்டணியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து களமாடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும்-தளத்திலுமான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து ஆலோசித்தோம். மகத்தான வெற்றிப் பயணத்தின் தொடக்கம்."
இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டுள்ளார். அதேபோல் கமல்ஹாசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாடு காக்கும் ஒற்றை நோக்கம். அதற்கான செயல்பாடுகளின் திட்டம் ஆலோசிக்க தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர், அன்பு இளவல் டி.ஆர்.பி.ராஜா அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. நிறைவான உரையாடல்" என்று பதிவிட்டுள்ளார்.