< Back
மாநில செய்திகள்
காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்
திருப்பூர்
மாநில செய்திகள்

காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்

தினத்தந்தி
|
15 May 2023 3:24 PM GMT

தாராபுரத்தில் உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறிகளை மொத்த வியாபாரிகளுக்கு விற்பதை தடுக்க கோரி காய்கறி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாராபுரத்தில் உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறிகளை மொத்த வியாபாரிகளுக்கு விற்பதை தடுக்க கோரி காய்கறி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தாராபுரம் -பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தை அருகே நகராட்சி காய்கறி வியாபாரிகள் தரைக் கடைகளை அமைத்து காய் கனிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தை சுற்றியும், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தரைக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்வினியோகம் செய்தது. இதை கண்டித்து நகராட்சிக்கு வரி செலுத்தும் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் உழவர் சந்தையை முற்றுகையிட்டனர்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பொள்ளாச்சி மெயின் ரோடு நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலை அறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வியாபாரிகள் கூறும்போது "உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தள்ளி தான் தங்கள் காய்கறிகளை விதிமுறைப்படி விற்பனை செய்கிறோம். எனவே தங்கள் வாழ்வதாரம் பாதிக்கும் வகையில் நகராட்சி ஆணையர் கொடுத்த உத்தரவு நோட்டீசை திரும்ப பெற வேண்டும். நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் விவசாயிகள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு வழங்கிய நோட்டீசை வாபஸ் பெறவேண்டும்" என்றனர்.

உடன்பாடு

பேச்சுவார்த்தையில் நகராட்சி வியாபாரிகள் கடைகளை 100 மீட்டர் அப்பால்ரோட்டின் ஓரத்தில் வைத்து வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி காய்கறி வியாபாரிகள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்