< Back
மாநில செய்திகள்
ஜி.எஸ்.டி.வரி விதிப்புக்கு கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு
திருப்பூர்
மாநில செய்திகள்

ஜி.எஸ்.டி.வரி விதிப்புக்கு கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு

தினத்தந்தி
|
17 July 2022 9:30 PM GMT

அரிசிக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி விதிப்புக்கு கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரிசிக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி விதிப்புக்கு கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கொங்கு மண்டல வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மகிஷா ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி

மத்திய அரசு, பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒரு 25 கிலோ அரிசி பைக்கு ரூ.50 முதல் ரூ.75 வரை விலை கூடும் அபாயம் உள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு இதுவரை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை. தமிழகத்தை பொருத்தவரை அரிசி மட்டுமே ஏழை, நடுத்தர மக்களுக்கு அன்றாடம் உபயோகிக்கும் பிரதான உணவு. இந்த 5 சதவீத வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டும்தான். அன்றாட செலவுக்கே கஷ்டப்படும் இந்த வேளையில் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருளான அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி என்பது ஏற்புடையது அல்ல.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் வருடத்திற்கு சராசரி 5 அரிசி ஆலைகள் வியாபாரமின்றி மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அரிசி ஆலைகள் மற்றும் மொத்த அரிசி விற்பனை கடைகள் மட்டும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதில் அரிசி விற்பனை செய்யும் பெரிய மொத்த மளிகை கடைகள், பெரிய மால்கள் எதுவும் கலந்துகொள்ளவில்லை. இதில் வியப்பு என்னவென்றால் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும், பெரிய அமைப்புகளும், சங்கங்களும் அமைதி காத்து வருகின்றன. அரிசி என்பது பொதுவான சாமானிய மக்களை பாதிக்கும் ஒரு அத்தியாவசியமான பொருளாக உள்ள நிலையில் அதற்கு வரி விதிப்பை விலக்கி கொள்ள நமது போராட்டம் மத்திய அரசு திரும்பி பார்க்கும் வகையில் இருக்க வேண்டாமா?. தமிழ்நாடு முழுவதும் அரிசி ஆலைகள் முதல் சாதாரண சின்ன மளிகை கடை வரை 2 நாட்கள் அடைத்து நமது எதிர்ப்பை காட்டலாம். அதற்கும் விலக்கி கொள்ளவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்க நாம் தயாராக இருந்தால் மட்டுமே இந்த வரி விலக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அனைவரும் ஒன்றிைணந்து போராடினால் மட்டுமே மத்திய அரசாங்கம் செவிமடுக்கும். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அமைப்புகளும், சங்கங்களும் ஒன்றிணைந்து இப்படி ஒரு போராட்டம் நடக்குமேயானால் எங்களது கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கம் முழு ஆதரவும் கொடுக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்