கள்ளக்குறிச்சி
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
|பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் விரைவில் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
விழிப்புணர்வு
தமிழக முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழக பள்ளிக்கல்வித்துறையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திட அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவன வல்லுநர்கள் மூலமாக மருத்துவம், கலை, மனித நேயம், பொறியியல் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள பல்வேறு உயர்நிலை படிப்புகள், தொழில்கல்வியில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் ஏற்படுத்தப்படவுள்ளது.
அடிப்படை வசதிகள்
அதன்படி பிளஸ்-2 முடித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்ளும் வகையில் மாபெரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி விரைவில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுகள், அகில இந்திய நுழைவுத்தேர்வுகள், மத்திய மற்றும் மாநில அரசின் முதன்மையான கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான ஓர் வழிகாட்டி நிகழ்ச்சி என்பதால் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அமர்வதற்கு தேவையான இருக்கை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். இதுதவிர மாணவர்கள் காண்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாக அகலமான திரை அமைப்பதோடு, தடையில்லா மின்சாரம் வழங்கிடவேண்டும். மேலும் மாணவர்கள் கலந்துரையாடல் செய்வதற்கு ஏதுவாக மைக் வசதி ஏற்படுத்தி நிகழ்ச்சி சிறப்பாக நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இணை இயக்குனர் (சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பாலச்சந்தர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் சரவணன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபி, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.