< Back
மாநில செய்திகள்
படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை:தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் லட்சியத்தை அடையலாம்மாணவர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
விழுப்புரம்
மாநில செய்திகள்

படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை:தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் லட்சியத்தை அடையலாம்மாணவர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை

தினத்தந்தி
|
3 July 2023 6:45 PM GMT

படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை, தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் லட்சியத்தை அடையலாம் என்று மாணவர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கான 'உயர்வுக்கு படி" வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது:-

மனநிறைவான வாழ்க்கை

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணமின்றி கல்வி, புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை, விடுதியில் தங்கி படித்தலுக்கான வழிகாட்டுதல், கல்விக்கடன், முதல்பட்டதாரி சான்றிதழ், கல்வி உதவித்தொகை போன்றவை குறித்து துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி முதல்வர்களால் எடுத்துரைக்கப்படவுள்ளது.

கல்வி என்பது வாழ்வின் உயர்வுக்கு மிக அவசியமான ஒன்றாகும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தொடர் கல்விமூலம் நம்முடைய இலக்கை எளிதில் அடைய முடியும். கல்வி கற்பதன் மூலம், சமூகத்தில் நல்ல மரியாதை, மனநிறைவான வாழ்க்கை கிடைக்கும். படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை, ஆர்வமும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் உங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடையலாம். குறிப்பாக பெண்கள் உயர்கல்வி பயின்று என்ன செய்யப்போகிறார்கள் என்ற தவறான புரிதல் சிலரிடம் காணப்படுகிறது. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். பெண்களும் உயர்கல்வி படிக்க வேண்டும். அதன் மூலம், சமூகத்தில் அவர்களுக்கான மரியாதை முழு அளவில் கிடைப்பதுடன் ஒரு பெண், கல்வி பயின்றால் அக்குடும்பமே நல்ல முன்னேற்றம் காண்பதோடு, சமுதாயமும் மேம்பாடு அடைந்திடும்.

தன்னம்பிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீத மாணவ- மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்து முன்னோடி மாவட்டமாக வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். எனவே 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிக்காத மாணவர்கள் அனைவரும் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி படிக்க வேண்டும். தங்களுடைய படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து கொடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை போன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகள் இருந்திடும். அவை அனைத்தையும் கடந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். நீங்கள் கற்கும் கல்வி உங்கள் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றிடும்.

தமிழ்நாடு அரசு, 'நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிக்கின்ற காலக்கட்டத்திலேயே வேலைவாய்ப்பும் பெற்றுத்தருகிறது. எனவே அனைவருக்கும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாநில அளவில் வெற்றி பெற்ற விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி பள்ளி மாணவிகள் ராஜஸ்ரீ, நிவேதா ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதை அவர்கள், மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மேலும் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் கையேடு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (திறன் மேம்பாடு) சிவநடராஜன், தேசிய உறுப்பினர் ஓம்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்