சென்னை
மதுரவாயலில் வாலிபர் கொலையில் மகனை தாயே அடித்துக்கொன்றது அம்பலம்
|மதுரவாயலில் வாலிபர் கொலையில் திடீர் திருப்பமாக பெற்ற மகனை தாயே இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.
வாலிபர் கொலை
மதுரவாயல் அடுத்த புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் அரி (வயது 45). டிரைவர். இவருடைய மனைவி செல்வி (38). இவர்களுடைய மகன் பூவரசன் (23). இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அரி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தாய்-மகன் இருவரும் தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக இறந்தார். செல்வி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியிடம் விசாரித்தபோது, கடுமையான மன அழுத்தத்தில் இருந்த செல்வியே தனது மகன் பூவரசனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, தன்னைத்தானே இரும்பு கம்பியால் தாக்கிக் கொண்டது தெரியவந்தது.
மன அழுத்தம்
செல்வி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக இரவில் தூங்காமல் இருந்து வந்ததாகவும், இதற்காக தினமும் தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் தெரிகிறது. சம்பவத்தன்றுதான் செல்வியை சொந்த ஊருக்கு அழைத்துச்சென்று மருத்துவம் பார்க்க முடிவு செய்திருந்தனர். அதற்கான பணிகளை பூவரசன் செய்திருந்தார். ஆனால் அரி இரவு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது தூக்கம் வராமல் அதிக மன அழுத்தத்தில் இருந்த செல்வி, அருகில் தூங்கி கொண்டிருந்த மகன் பூவரசனை இரும்பு கம்பியால் தாக்கியதுடன், தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்ய முடிவு
முன்னதாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செல்வியிடம், போலீசார் விசாரித்தபோது, "எனது மகனை நான்தான் இரும்பு கம்பியால் தாக்கினேன்" என்றார். அப்படியானால் உங்களை தாக்கியது யார்? என கேட்டபோது அவர் பதில் கூறவில்லை. இதனால் அவர் கூறியதை போலீசார் நம்பவில்லை. ஆனால் வெளியாட்கள் யாராவது அந்த நேரத்தில் அவர்களது வீட்டுக்கு வந்து சென்றார்களா? என கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது அப்படி யாரும் வந்து சென்றதாக தெரியவில்லை.
மேலும் தீவிர விசாரணை நடத்திய பிறகுதான் செல்வியே அவருடைய மகனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றது உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர். செல்விக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.