சென்னை
வளசரவாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்து கொலை - 3 பேர் கைது
|வளசரவாக்கத்தில் சிறுவர்களை தாக்குவதாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளசரவாக்கம் பகுதியில் நேற்று காயங்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாலையில் மயங்கி கிடப்பதாக வந்த தகவலையடுத்து, வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காயங்களுடன் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரிந்த நபர் கையில் கட்டையை வைத்துக்கொண்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்த சிறுவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் 2 சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கட்டையால் தாக்கிய போது எதிர்பாராத விதமாக தலையில் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதில் சாலையில் மயங்கி கிடந்த அவரை அப்படியே விட்டு சென்றதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனதும் தெரியவந்தது. இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் இறந்து போன சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விருகம்பாக்கத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன்(வயது 20), போருரை சேர்ந்த கணேசன் (42), ஜெய்முத்துவேல் (40) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.