< Back
மாநில செய்திகள்
பச்சமலையில் மாலையில் பொங்கல் வைத்து வழிபட்ட ஆண்கள்
திருச்சி
மாநில செய்திகள்

பச்சமலையில் மாலையில் பொங்கல் வைத்து வழிபட்ட ஆண்கள்

தினத்தந்தி
|
17 Jan 2023 2:07 AM IST

பச்சமலையில் மாலையில் பொங்கல் வைத்து ஆண்கள் வழிபட்டனர்.

பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வழிபட்டனர். இந்நிலையில் துறையூரை அடுத்த பச்சமலை வண்ணாடு ஊராட்சியில் மணலோடை கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள், தங்கள் மூதாதையர்கள் வழியில் மாலை நேரத்தில் சூரிய பொங்கல் வழிபாடு செய்தனர். இதில் பெண்களுக்கு பதிலாக பெரும்பாலும் ஆண்களே பொங்கல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அவர்கள் பச்சமலையில் அவர்களுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய தூண்கார நெல், புழுதி நெல் ஆகிய நெல் வகைகளை வைத்து பொங்கலிட்டு, மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து, துத்திப்பூ மற்றும் சங்குப்பூ வைத்தும், பின்னர் படையலிட்டும் வழிபட்டனர். மற்ற பகுதிகளில் அதிகாலையில் சூரிய உதயத்தின்போது பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபடுவதே வழக்கம். ஆனால் பச்சமலையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மாலையில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தா.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் மாட்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து கோவிலுக்கு சென்று வழிபட்டனர். முன்னதாக தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், கரும்பு படையலிட்டு, புதுபானைகளில் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். நேற்று மாட்டு பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசியும், புதிய கயிறுகள் அணிவித்தும், பொங்கல் ஊட்டியும் கொண்டாடினர்.

திருச்சி, உப்பிலியபுரம் பகுதியிலும் நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புளியஞ்சோலை, அய்யாறு ஏரிகளில் விவசாயிகள் மாடுகளை குளிப்பாட்டி, அவற்றுக்கு சந்தனம், குங்குமமிட்டு, பொங்கல் ஊட்டி வழிபட்டனர்.

மேலும் செய்திகள்