தர்மபுரி
பாப்பாரப்பட்டியில்தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிப்புஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்
|தர்மபுரி:
பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நினைவு நாள் அனுசரிப்பு
சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா 98-வது நினைவு நாளையொட்டி தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தியாகியின் உருவப்படத்திற்கும் அமைச்சர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாந்தி, எம்.எல்.ஏ.க்கள். ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி. பழனியப்பன் ஆகியோர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அலங்கரிப்பு
சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 98-வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படம், நினைவிடம், நினைவுத்தூண் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், தி.மு.க. மாநில நிர்வாகிகள் தர்மசெல்வன், சத்தியமூர்த்தி, சூடப்பட்டி சுப்பிரமணி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன், தாசில்தார் சவுகத்அலி, பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன், செயல் அலுவலர் கோமதி, ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி மாதேஷ், ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி சேதுமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் பொதுமக்கள் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.