மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை யாரும் மீறிவிட முடியாது - கே.எஸ்.அழகிரி அறிக்கை
|மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை யாரும் மீறிவிட முடியாது என்று கே.எஸ்.அழகிரி அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதாக அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவகுமார் சொன்ன ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு அண்ணாமலை தேவையற்ற வாதங்களை முன்வைக்கிறார்.
கர்நாடகத்தில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் அவர் திரும்ப தமிழகத்துக்கு வர முடியாது. 'கோ பேக் ஸ்டாலின்' என்ற கோஷத்தை முன்வைப்போம் என்கிறார். காவிரி நீரை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. மழைக்காலங்களில் எவ்வளவு நீர் தர வேண்டும், வறட்சிக்காலங்களில் எவ்வளவு நீர் தர வேண்டும் என்பது பற்றியும், இருக்கிற நீரை கர்நாடகத்தின் மற்ற ஏரிகளில் தேக்கிவைப்பது எவ்வளவு சட்டவிரோதம் என்பது பற்றியும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியிருக்கிறது. அதை யாரும் மீறிவிட முடியாது.
கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சொல்லிவிட்ட காரணத்தாலேயே அந்த அணையை கட்டிவிட முடியாது. தமிழ்நாடு அரசும், தமிழக காங்கிரசும், எங்களின் கூட்டணி கட்சிகளும், சட்டமும், நீதியும் அதை ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.