< Back
மாநில செய்திகள்
மேகதாது அணை விவகாரம்; கர்நாடக முதல்-மந்திரியின் அறிவிப்புக்கு முத்தரசன் கண்டனம்
மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்; கர்நாடக முதல்-மந்திரியின் அறிவிப்புக்கு முத்தரசன் கண்டனம்

தினத்தந்தி
|
17 Feb 2024 8:24 PM IST

மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பதாக கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமைய்யா அறிவித்துள்ளார்.

சென்னை,


மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்கான முறையில் ஒரு மண்டலக் குழுவும், இரண்டு துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியிருந்தார். இந்நிலையில் கர்நாடக முதல்-மந்திரியின் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பதாக கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமைய்யா அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கான முறையில் ஒரு மண்டலக் குழுவும், இரண்டு துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டிருப்பதாக முதல்-மந்திரி கூறியுள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு நான்கு மாநிலங்கள் - கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி - தொடர்புடைய பிரச்சினையாகும். கடந்த 1974-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சென்னை மாகாண அரசு, மைசூர் அரசுடன் 1924-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம். காலத்தில் புதுப்பித்திருந்தால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் கிடைத்திருக்கும். அப்போதிருந்த காங்கிரஸ் மாநில அரசும், மத்திய அரசும் அளித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

1974-ம் ஆண்டு முதல் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட தமிழகம் சட்ட ரீதியாகவும், நேரடியாகவும் போராடி வருகின்றது. காவிரி நதி நீர் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பும், இதன் மீதான மேல் முறையீடுகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி உத்தரவையும் மதித்து நடக்க வேண்டிய கர்நாடக மாநில அரசு, பெங்களூரு நகரக் குடிநீர் கோரிக்கையை ஆயுதமாக்கி. தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை அடியோடு பறித்து விடும் திசை வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் பிடிவாதம் காட்டுவதை கண்டிக்கிறோம்.

இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் தொடர்ந்து தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதன் மீது மத்திய அரசும் தலையிட மறுத்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை தொடர்பான பிரச்சினையை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் முன்மொழிவுக்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் அறிவிப்பு மாநிலங்களிடையே நிலவும் நல்லுறவுக்கு வலுச் சேர்க்காது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது என்பதை கர்நாடக மாநில அரசும், மக்களும் உணர வேண்டும். சுமுக உறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் கர்நாடக மாநில முதல்-மந்திரியின் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது."

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்