< Back
மாநில செய்திகள்
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா துணை முதல்-மந்திரி பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா துணை முதல்-மந்திரி பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தினத்தந்தி
|
21 March 2024 7:40 PM IST

கர்நாடக அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.கே.சிவக்குமார்,"நான் கர்நாடகாவில் நீர்ப்பாசனத்துறையை பெற்றிருப்பதே மேகதாது அணையை கட்டுவதற்காகத்தான்.

கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம், காவிரி ஆணையம் முன்பு இது தொடர்பான வழக்குகள் வர உள்ளது. அதில் நியாயம் கிடைக்கும். அனைத்து நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேகதாது அணையை தமிழகம் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்" என்று கூறினார்.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரின் பேச்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

மேகதாது அணை குறித்து ஏற்கனவே கர்நாடக அரசின் முதல்வரும் துணை முதல்வரும் ஆட்சேபமிக்க கருத்துகளை கூறியும் இந்த தி.மு.க. அரசின் முதல்வர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்த நிலையில், தற்போது "மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்" என்று கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கூட்டணி தர்மத்திற்காக தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகும் நிலையிலும் மவுனியாக இருக்கும் இந்த தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய கடும் கண்டனம்.

ஏற்கனவே மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அனுமதித்த இந்த அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்