திருவண்ணாமலை
கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
|குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு, கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் இ-ஸ்ரம் மாவட்ட அளவிலான செயல்பாட்டு குழு ஆகியவற்றின் கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசுகையில், 'திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 789 அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் நடைபெற உள்ள இ-ஸ்ரம் முகாமில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் பதிவு செய்து பயன்பெறலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் தொழிலாளர்களை ஒழிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்றார்.
அதைத்தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறியும் நேர்வில் ஏற்படும் சிரமங்கள் குறித்து குழு உறுப்பினர்களுடன் கலெக்டர் கலந்து ஆலோசித்தார்.
கூட்டத்தில் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்கள், பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.