கிருஷ்ணகிரி
பொது சுகாதாரகுழு கூட்டம்
|ஓசூர் மாநகராட்சியில் பொது சுகாதாரகுழு கூட்டம் நடந்தது.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் பொது சுகாதார குழு கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சினேகா முன்னிலை வகித்தார். இதில், நகர் நல அலுவலர் அஜிதா, பொது சுகாதாரக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழு தலைவர் பேறுகையில், ஓசூரில் வருகிற 7-ந் தேதி நடைபெறவுள்ள தேர்த்திருவிழாவை முன்னிட்டு தூய்மைப்பணிக்காக 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் 6-ந் தேதி காலை முதல் 7-ந் தேதி இரவு வரை இடைவிடாது தூய்மைப்பணியை மேற்கொள்வார்கள். ஓசூரில் உள்ள தியேட்டர்களில் கழிப்பிடங்கள் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை கண்காணித்து பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகர பகுதிகளில் பொது கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மொபைல் டாய்லெட்டுகள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, பத்திரிகையாளர்களை போட்டோ எடுத்த பின் அவையைவிட்டு வெளியேறுமாறு ஆணையாளர் கூறினார். இதனால் பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பின்னர், ஆணையாளர் பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க அனுமதித்தார். இதன் காரணமாக அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.