கிருஷ்ணகிரி
அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
|கொரட்டகிரி கிராமத்தில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதை தொடர்ந்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
கொரட்டகிரி கிராமத்தில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதை தொடர்ந்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
அமைதி பேச்சுவார்த்தை
தேன்கனிக்கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமம் வழியாக அருகில் உள்ள கல்குவாரிகளை சேர்ந்த லாரிகள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கொரட்டகிரி கிராமம் வழியாக அருகில் உள்ள கிராமங்களில் செயல்படும் கல்குவாரிகள், மற்றும் ஜல்லி கிரஷரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மூலம் கொரட்டகிரி கிராமத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், காற்றில் பரவும் மாசினால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். கல்குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து ஜல்லி துகள்கள் வேளாண் பயிர்கள் மீது படர்ந்து பயிர்கள் சேதம் அடைவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வாக கல்குவாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்தவும் கோரிக்கை வைத்தனர்.
உதவி கலெக்டர் தலைமையில் குழு
அதன் அடிப்படையில் இன்று கொரட்டகிரி கிராம பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளீர்கள். பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் கல்குவாரிகளின் மீது சுமத்தப்பட்டுள்ள விதிமீறல்கள் குறித்து புல தணிக்கை செய்து அறிக்கை அளிக்க ஓசூர் உதவி கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் மாசு ஏற்படுவது குறித்தும், கிரஷர் குவாரிகளில் இருந்து வெளிவரும் மாசுகளின் அளவீடுகள் குறித்தும் மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் நேரடி தொடர் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை விதிக்க இயலாது
கொரட்டகிரி கிராமத்தின் வழியாக கனரக வாகனங்கள் முற்றிலும் செல்ல தடை விதிக்க முடியாது. எனவே குறைந்த அளவிலான வாகனங்களை மட்டும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பள்ளி நேரங்கள் தவிர்த்து இயக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கிரஷர்களின் வாகனங்கள் அனைத்தும் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்லாமல் வெவ்வேறு மாற்று பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்படும். கொரட்டகிரி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் கனிம நிதியில் இருந்தும் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியில் இருந்தும் நிறைவேற்றி தரப்படும்.
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள், ஜல்லி கிரஷர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலன் பாதிக்காத வகையில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கனித வன துணை இயக்குனர் வேடியப்பன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.