தர்மபுரி
போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆலோசனை கூட்டம்
|பாலக்கோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாலக்கோடு:
பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி. ரோடு, தர்மபுரி-ஓசூர் சாலை, ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வயை ஆக்கிரமித்து கடைகளை விரிவுபடுத்தி உள்ளதால் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய முடியாமல் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்பை அகற்ற கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாலக்கோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர்கள், கடை உரிமையாளர்கள், வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் முரளி முன்னிலை வகித்தார். இதில் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பள்ளி வாகனங்களை முறைப்படுத்துவது, காலை, மாலை நேரங்களில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரி செய்வது, ஒரு வழிப்பாதை திட்டத்தை செயல்படுத்துவது, பஸ் நிலையத்திற்குள் செல்லும் ஆட்டோக்கள், தள்ளுவண்டிகளை கட்டுப்படுத்துவது, லாரிகளை குறிப்பிட்ட நேரத்தில் நகருக்குள் வருவதை தடை செய்வது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சாக்கடை கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.