தர்மபுரி
வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும்
|தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மச்செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் உமாசங்கர், ரேணுகாதேவி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தலைமை கழகம் அறிவுறுத்தலின்படி தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 597 வாக்குச்சாவடிகளுக்கும் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களை முகவர்களாக நியமிக்க வேண்டும். அதற்கு அந்தந்த பகுதியை கட்சி நிர்வாகிகள் உரிய கால அவகாசத்துக்குள் முகவர்களை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், சேட்டு, வைகுந்தன், மல்லமுத்து, முருகேசன், சபரிநாதன், கருணாநிதி, செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன், சரஸ்வதி துரைசாமி, சோலை மணி, வேலுமணி, பேரூராட்சி செயலாளர்கள் சண்முகம், வீரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.