கிருஷ்ணகிரி
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
|கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொன்விழா நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சமரசம், முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் சாகுல் அமீது, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க., பொன்விழா நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க. அரசை கண்டிப்பது. அண்ணாவின் கொள்கைக்கு எதிராக இந்துக்களை இழிவாக பேசி வரும் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை வன்மையாக கண்டிப்பது. நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில், அ.தி.மு.க. 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அவரவர் சார்ந்த பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச்செயலாளர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தங்கமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் கல்பனா, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.