ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 96,656 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு- கண்காணிப்புக்குழு தலைவர் தகவல்
|ஈரோடு மாவட்டத்தில் 96 ஆயிரத்து 656 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாக கண்காணிப்பு குழு தலைவர் கணேசமூர்த்தி எம்.பி. தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 96 ஆயிரத்து 656 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாக கண்காணிப்பு குழு தலைவர் கணேசமூர்த்தி எம்.பி. தெரிவித்து உள்ளார்.
கண்காணிப்புக்குழு கூட்டம்
மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் குழு தலைவர் கணேசமூர்த்தி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 253 பேர் பதிவு செய்து உள்ளனர். இதில் 3 ஆயிரத்து 111 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். 42 பேரூராட்சிகளில் உள்ள 630 வார்டுகளில் மக்களின் வசதிக்காக சுகாதாரம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.
குடிநீர் இணைப்பு
மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 56 ஆயிரத்து 291 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், 119 ஊராட்சிகளில் 1,007 குக்கிராமங்களுக்கு ரூ.96 கோடியே 83 லட்சம் மதிப்பிலான 96 ஆயிரத்து 656 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி மதிப்பில் 54 பணிகள் தேர்வானது. ரூ.480 கோடி மதிப்பிலான 32 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. ரூ.485 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 24 மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடங்கள், தாளவாடி வட்டாரத்தில் உள்ள 38 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடங்களில் 3 ஆயிரத்து 110 மாணவ, மாணவிகளுக்கு கடந்த 16-ந் தேதி முதல் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கணேசமூர்த்தி எம்.பி. கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் மதுபாலன், மாவட்ட வன அதிகாரிகள் கவுதம், கிருபாசங்கர், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.