ஈரோடு
இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
|இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ஈரோடுஇந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் 34-ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவிற்கான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர் குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் பா.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், ஈரோடு மாநகரில் 501 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
விளையாட்டு போட்டி
மேலும் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. வருகிற 31-ந்தேதி காலை 6 மணிக்கு சம்பத் நகர் பிரிவில் கணபதி ஹோமத்துடன் 11 அடி வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு சம்பத் நகர் பிரிவில் சிறுவர் -சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
செப்டம்பர் மாதம் 1-ந்தேதி மாலை 6 மணிக்கு மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சியும், 2-ந்தேதி மாலை 6 மணிக்கு இந்து பண்பாட்டு தினம், கோமாதா பூஜையும் நடைபெறுகிறது. 3-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம் சம்பத் நகரில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
இதற்கிடையில் 1-ந்தேதி விஜயமங்கலம், பெருந்துறை, காஞ்சிகோவில், அறச்சலூர் உட்பட்ட பகுதிகளிலும், 2-ந்தேதி சென்னிமலை, வெள்ளோடு, கொடுமுடி உட்பட்ட பகுதிகளிலும், 4-ந்தேதி சித்தோடு, பி.பி.அக்ரஹாரம், மொடக்குறிச்சி உட்பட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கோவை கோட்ட செயலாளர் பழனிசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் சக்தி முருகேசன், செயலாளர்கள் வக்கீல் முரளி, கார்த்திக், சங்கர், ரமேஷ், துணைத்தலைவர்கள் லோகநாதன், சண்முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவின் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.