ஈரோடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
ஈரோடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
முதல்-அமைச்சர் வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிறார். வருகிற 25-ந்தேதி திருப்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் முதல் -அமைச்சர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டிக்கு வருகிறார். அங்கு மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஈரோடு காலிங்கராயன் இல்லத்துக்கு வந்து இரவு ஓய்வு எடுக்கிறார். அதைத்தொடர்ந்து மறுநாள் 26-ந்தேதி பெருந்துறை அருகே சரளை பகுதியில் நடக்கும் அரசு விழாவில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு அருகே சோலார் பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி உள்பட பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுக்கிறார்.
ஆலோசனை கூட்டம்
மேலும் கட்டி முடிக்கப்பட்ட கனிமார்க்கெட் ஜவுளி சந்தை, காளை மாட்டு சிலை அருகே மாநகராட்சி வணிக வளாகம் உள்பட பல்வேறு முடிவடைந்த திட்டங்களை முதல் -அமைச்சர் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு வருகைதர உள்ளதையொட்டி, அனைத்துத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் மதுபாலன் உள்பட அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.