< Back
மாநில செய்திகள்
ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
16 Aug 2022 10:50 PM IST

சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நல்லம்பள்ளியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி, வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிராம சபை கூட்டம்

சுதந்திர தின விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. நல்லம்பள்ளி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராமத்தில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், நல்லம்பள்ளியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தர்மபுரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கலெக்டர் நேர்முக உதவியாளர் பழனிதேவி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, தாசில்தார் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவுரி, ஷகிலா மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பாலக்கோடு

பாலக்கோடு ஒன்றியம் பேளாரஅள்ளி ஊராட்சியில் தலைவர் ராதா தலைமையிலும், தண்டுகாரணஅள்ளி ஊராட்சியில் தலைவர் மணி தலைமையிலும் ஜெர்த்தலாவ் ஊராட்சியில் தலைவர் முத்துமணி தலைமையிலும், பி.செட்டிஹள்ளி ஊராட்சியில் தலைவர் கணபதி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

இதில் உதவி திட்ட அலுவலர் தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, சுருளிநாதன் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் முருகேசன், தாமோதிரன், சஞ்சீவன், கோவிந்தன், சண்முகம் மற்றும் துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்

பென்னாகரம் ஒன்றியம் பிளியனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. இதில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ கலந்து கொண்டார். மாங்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா தலைமையிலும், பருவதனஅள்ளி ஊராட்சியில் தலைவர் ராணி முனிராஜ் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

இதில் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் மணி, சுசீலா ஊராட்சி செயலாளர்கள் மாதையன், முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்