கிருஷ்ணகிரி
ஓசூர் மாநகராட்சி அவசர கூட்டம்
|ஓசூர் மாநகராட்சி அவசர கூட்டம் நடந்தது.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சியின் அவசர கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், என்.எஸ்.மாதேஸ்வரன், ஸ்ரீதரன், நாகராஜ், பாக்கியலட்சுமி, முருகம்மாள் மதன், குபேரன் என்ற சங்கர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில், மேயர் சத்யா பேசுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான 9 நடுநிலைப்பள்ளிகளில் ரூ.6.35 கோடி மதிப்பில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டி தரப்படும். மாநகர சுகாதார அலுவலர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 4 மண்டலங்களுக்கும் மாநகராட்சி சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் 4 மண்டல அலுவலகம் கட்டப்படும். மாநகராட்சியில் 387 பூங்காக்கள் தனியார் துறை மூலம் பராமரிக்கப்படும். மேலும் சில பூங்காக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனை கண்டறிந்துள்ளோம். அவற்றையும் மீட்டு சுற்றுச்சுவர் அல்லது இரும்பு வேலி அமைத்து பாதுகாக்கப்படும். ஓசூரில் உள்ள பூங்காக்களை பராமரிக்கும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். ஹட்கோ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மினி லாரி என 45 வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க மினி லாரி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஓசூரில் முக்கிய இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும் என்று கூறினார். கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.