தர்மபுரி
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
|பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தர்மபுரி சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணைத்தலைவர்கள் சண்முகம், காவேரி, நிர்வாகிகள் முனிராஜ், மகேஸ்வரி ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், கிராம உதவியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.