< Back
மாநில செய்திகள்
பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்- அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
ஈரோடு
மாநில செய்திகள்

பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்- அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்

தினத்தந்தி
|
30 May 2022 2:06 AM IST

பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு

பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சி.பாலகிருஷ்ணன், பொருளாளர் சி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய தலைவராக பொறுப்பேற்று கொண்ட வி.கே.ராஜமாணிக்கம் கலந்துகொண்டு பேசினார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பல தொழில்கள் நலிவடைந்து உள்ள நிலையில் சொத்து வரி உயர்வு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சொத்து வரியை 25 சதவீதத்துக்கு மிகாமல் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது.

* பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்.

கூலி நிர்ணயம்

* பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

* நேதாஜி ரோட்டில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கும், கனிமார்க்கெட்டில் உள்ள தினசரி, வாரச்சந்தை வியாபாரிகளுக்கும் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் தனி அரங்கம் அமைத்து கொடுக்க வேண்டும்.

* கனி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பஸ் நிறுத்தம் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும், டி.வி.எஸ். வீதியையும், நேதாஜிரோட்டையும் இணைக்கும் வகையில் புதிய வணிக வளாகத்தின் வழியாக 60 அடி சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

* லாரிகளில் இருந்து சரக்கு ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் நடைமுறையில் உள்ள கூலி மிக அதிகமாக உள்ளதால், லாாி தொழிலில் ஈடுபடுவோர் தொடர்ந்து தொழில் செய்வதற்கு கடினமான சூழல் உருவாகி வருகிறது. இதுதொடர்பாக தொழிலாளர் அமைப்புகளுக்கும், லாரி தொழிலில் ஈடுபடுவோருக்கும் பாதிக்காத வகையில் கூலி நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது.

வரி ரத்து

* பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மஞ்சள் உள்பட 39 வகையான பொருட்களுக்கு மாநில அரசு விதிக்கும் ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும்.

* மாவட்ட விற்பனைக்குழு நிர்வாகம் மாதந்தோறும் வணிகர்கள் கூட்டத்தை நடத்தி குறைபாடுகளை கேட்டறிந்து, வர்த்தகம் வெளிப்படையாகவும், நிதானமாகவும் நடைபெற செய்ய வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். அதன்படி கூட்டமைப்பு தலைவராக வி.கே.ராஜமாணிக்கம், பொதுச்செயலாளராக பி.ரவிசந்திரன், பொருளாளராக ஆர்.முருகானந்தம், துணைத்தலைவர்களாக பாலு என்கிற பி.தனபாலன், பி.கே.என்.சந்திரசேகரன், வி.ராஜமாணிக்கம், எஸ்.ஏ.சண்முகசுந்தரம், துணைச்செயலாளர்களாக என்.டி. மூர்த்தி, செல்வம் என்கிற சி.பழனிசாமி, கே.ஜிப்ரி, துணை பொருளாளராக பி.கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளராக எம்.துரைசாமி மற்றும் இயக்குனர்கள் பதவியேற்று கொண்டனர்.

மேலும் செய்திகள்