< Back
மாநில செய்திகள்
சேலம் மாநகராட்சி கூட்டம்:தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
சேலம்
மாநில செய்திகள்

சேலம் மாநகராட்சி கூட்டம்:தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
23 Aug 2023 1:48 AM IST

சேலம்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தர்ணா போராட்டத்தால் பரபரப்பானது.

மாநகராட்சி கூட்டம்

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை மேயர் சாரதாதேவி, ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கொறடா செல்வராஜ் பேசினார். அப்போது மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களை நிர்வாகம் செய்வது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பினார்.

அரசின் கொள்கை முடிவுப்படி தற்போது சேலம் மாநகராட்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது தனியார் நிறுவனம். நிர்வாகம் செய்வது மாநகராட்சி தான். தூய்மை பணியில் சேலம் மாநகராட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும். எப்போதும் ஒரு புதிய திட்டம் நடைமுறைப்படுத்தும் போது அசவுகரியங்கள் ஏற்படும். எனவே விரைவில் நம்ம ஊர் நல்ல படியாக மாறும். அதுவரை சிறு குழப்பங்கள் இருக்கும். நாளடைவில் சரியாகி விடும் என்று கூறினார்.

பதவி உயர்வு

விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இமயவரம்பன் பேசும் போது, தூய்மை பணியாளர்களாக சேர்ந்தவர்கள், இறக்கும் வரை அதே பணியில் தான் இருப்பார்கள். ஆனால் தற்போது கல்வித்தகுதிக்கு ஏற்ப தூய்மை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பணிக்குழு உள்ளிட்ட அந்தந்த குழுவினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் கூட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சாந்தமூர்த்தி பேசினார். அப்போது வார்டு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணி தொடங்கும் நிலையில், தற்போது வார்டு அலுவலகத்திற்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு என்ன காரணம்? மாநகராட்சி நடுநிலையோடு இயங்க வேண்டும்.

வாக்குவாதம்

ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தலையீடு உள்ளது என்று கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் தெய்வலிங்கம், இளங்கோ, முருகன் உள்ளிட்ட பலர் சாந்தமூர்த்தியிடம் எப்படி மாநகராட்சி நிர்வாகத்தில் எம்.எல்.ஏ. தலையீடு உள்ளது என்று கூறலாம் என்று கேள்வி எழுப்பினர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து எதிர்க்கட்சி தலைவரை பேச விடாததை கண்டிக்கிறோம் என்று கூறி மேயர் இருக்கை முன்பு கூட்ட மன்றத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்துவது என்றால் கூட்ட மன்றத்தை விட்டு வெளியில் சென்று நடத்தவும் என்று கூறினர். இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மேயர் ராமச்சந்திரன் உறுப்பினர்கள் அவரவர் இருக்கைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு இருக்கையில் அமர்ந்தனர். பின்னர் மேயர் ராமச்சந்திரன் பேசும் போது உறுப்பினர்கள் வார்டு குறை, நிறைகள் மட்டும் பேச வேண்டும். தனிப்பட்டவர்கள் பற்றி பேசக்கூடாது என்றுகூறினார்.

ஏலம் விடப்படும்

பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சாந்தமூர்த்தி பேசும் போது மாநகராட்சி நிர்வாகத்தில் சில முறையில்லாத திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவற்றை சரி செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஆணையாளர் பாலச்சந்தர் பேசுகையில், மார்க்கெட், பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகள் உள்ளிட்ட மாநகராட்சிக்குட்பட்ட வருவாய் இனங்கள் அனைத்திற்கும் இந்த மாத இறுதிக்குள் ஏலம் விடப்படும். மாநகராட்சிக்கு சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, அபராதம், கேளிக்கை வரி, பாதாள சாக்கடைக்கு புதிய இணைப்பு உள்ளிட்ட 7 வகையான வருவாய் இனங்கள் மூலம் ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரை வருவாய் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போராட்டம்

கூட்டம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் நிருபர்களிடம் கூறும் போது, மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி பணிகளில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தலையீடு உள்ளது. இந்த நிலை மாறவில்லை என்றால், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்புதல் பெற்று மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்