தர்மபுரி
அரூரில்தொழில் முனைவோர் விழிப்புணர்வு கூட்டம்
|தர்மபுரி மாவட்ட தொழில் மையம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பழங்குடியினர் கூட்டமைப்பு மாநில தலைவர் ஸ்டான்லி முருகேசன், தொழில் சங்க நிர்வாகிகள் மாயக்கண்ணன், சுகி சிவம் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை. 18 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியான திட்ட தொகையில் 35 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. ஆர்வம் உள்ள தகுதி வாய்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் வரும்பட்சத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு சார்பில் தொழில் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் இந்த திட்டத்தை பயன்படுத்தி தொழில் முனைவோர்களாக அதிக அளவில் உருவாக வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.