3 முறை தெப்பத்தில் வலம்வந்த மீனாட்சி-சுந்தரேசுவரர்... மதுரையில் தெப்பத் திருவிழா கோலாகலம்
|விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம், தைப்பூசத்தையொட்டி நேற்று கோலாகலமாக நடந்தது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம், தைப்பூசத்தையொட்டி நேற்று கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு வண்டியூர் மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில், விழாவின் முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவும் நடந்தது.
தெப்ப உற்சவத்துக்காக நேற்று அதிகாலை மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, சுவாமி சன்னதி தெரு, முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் எதிரே உள்ள முக்தீஸ்வரர் கோவிலை சென்றடைந்தனர். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து சுவாமி-அம்மன் அங்கிருந்து வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்து, தெப்பத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தை வடம் பிடித்து இழுக்க பகல் 11.05 மணிக்கு தெப்பக்குளத்தை தெப்பம் வலம் வர தொடங்கியது. 2 முறை தெப்பக்குளத்தை வலம் வந்த பிறகு சுவாமியும், அம்மனுக்கும் மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.
நேற்று மாலை வரை அங்கு வீற்றிருந்த மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இரவு மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளினர். 3-வது சுற்றாக இரவு 7.10 மணிக்கு மேல் தெப்பத்தை வலம் வர தொடங்கினர். திரளான பக்தர்கள் தெப்பக்குளத்தின் 4 கரைகளிலும் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தெப்ப உற்சவம் முடிந்த பிறகு மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.