< Back
மாநில செய்திகள்
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
மதுரை
மாநில செய்திகள்

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
2 May 2023 8:30 PM GMT

திருமங்கலம், குலசேகரகோட்டை பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமங்கலம்,

திருமங்கலம், குலசேகரகோட்டை பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமாங்கல்யம் செய்த ஊர்

திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் 650 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தில் திருமாங்கல்யம் செய்து தந்த ஊர் என்பதால் திருமாங்கல்யபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும், நாளடைவில் திருமங்கலம் என மாறியதாகவும் வரலாறு உள்ளது.

பெருமை வாய்ந்த கோவிலில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும் அதே நாளில் அதே நேரத்தில் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தை யொட்டி காலை முதல் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கினார்கள்.

வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தியும் சொக்கநாதர் - பிரியாவிடை, பெருமாள் ஆகியோர் பக்தர்களுக்கு கோவில் திருமண மேடையில் காட்சியளித்தனர். தொடர்ந்து சொக்கநாதர் - மீனாட்சிக்கு காப்பு கட்டும் வைபவமும் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சொக்கநாதர் - மீனாட்சியாக மேடையில் நின்று மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க 8.40 மணிக்கு சொக்கநாதர் மீனாட்சி அம்மன் கழுத்தில் மாங்கல்யம் சூட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த பழைய மாங்கல்யத்தை மாற்றி புதிய திருமாங்கல்யத்தை சூட்டிக் கொண்டனர்.

குலசேகரன்கோட்டை

வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் சிறுமலை அடிவார ஓடைக்கரையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. இந்த திருமண வைபவத்தில் சொக்கநாதர் வெண்பட்டு உடுத்தியும், மீனாட்சி அம்மன் பச்சை கலர் மேலாடையும் ஆரஞ்சு கலர் பட்டு சேலையும் அணிந்திருந்தார். இதில் காலை 8.59 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள் நிற மங்கள நாண் அணிவிக்கப்பட்டது.இதில் மீனாட்சியாக கார்த்திக் பட்டரும் சொக்கநாதராக குமார் பட்டரும் மாலை மாற்றி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாணத்தின் போது பெண்கள் தங்களது கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்