< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மழையூர் ஆரம்ப சுகாதார நிலைய கிணற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

தினத்தந்தி
|
17 Nov 2022 12:31 AM IST

மழையூர் ஆரம்ப சுகாதார நிலைய கிணற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையம்

கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், கர்ப்பக்கால பரிசோதனை, தடுப்பூசி, பிரசவம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.

இந்த நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ கழிவுகள் முறையாக கையாளப்படுவதில்லை. மருத்துவமனை வளாகத்திலேயே ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன.

கடும் துர்நாற்றம்

மருத்துவமனை கட்டிடத்தின் அருகே பயன்பாடற்ற கிணறு உள்ளது. இந்த கிணற்றில் மருத்துவக்கழிவுகள், காலாவதியான மருந்துகள், ஊசிகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ துணிகள் போன்றவை கொட்டப்பட்டு வருகின்றன. எனவே மருத்துவமனை வளாகம் மட்டுமல்லாது அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகே வசிக்கும் மக்கள் மற்றும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி

பல்லவராயன்பத்தை சேர்ந்த சுசேந்திரன்:- 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 50 அடிக்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இந்த கிணற்றின் அருகே தான் ஆழ்குழாய்கிணறு உள்ளது. இதன்மூலம் கிடைக்கும் தண்ணீரையே மருத்துவமனைக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரகேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி போன்றவை பயன்படுத்தப்படாமல் வீணாகி மருத்துவமனை வளாகத்தில் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளது.

எனவே நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிணற்றில் போடப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகள், வளாகத்தில் சிதறி கிடக்கும் மருந்து குப்பைகள் போன்றவற்றை உடனே அகற்ற வேண்டும்.

மருத்துவக்கழிவுகளை அகற்ற கோரிக்கை

தீத்தானிபட்டி கிராமத்தை சேர்ந்த ரெங்கராஜ்:- கிராம பகுதிகளில் ஊராட்சிகளின் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கையாளவே தனி மேலாண்மை கையாளப்படுகிறது. இந்தநிலையில் மருத்துவக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் மருத்துவமனை நிர்வாகம் கவன குறைவாக இருந்தது வேதனையாக உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம்தான் தாலுகாவில் மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலையம் ஆகும். தினமும் கர்ப்பிணிகள் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். கர்ப்பக்காலத்தில் தொற்று நோய் ஏற்படா வண்ணம் காக்க வேண்டிய கடமை மருத்துவமனைக்கு உண்டு. எனவே சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கழிவுகளையும் பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்