கோயம்புத்தூர்
பொது இடத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
|வால்பாறையில் பொது இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. அதை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் பொது இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. அதை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு ஆஸ்பத்திரி
வால்பாறையில் கூட்டுறவு காலனி பகுதிக்கு செல்லும் வழியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த அரசு ஆஸ்பத்திரியில் விபத்து சிகிச்சை பிரிவு, பொது சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய மகப்பேறு பிரிவு ஆகியவை உள்ளது. இங்கு சேகரமாகும் மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு எந்தவித வசதிகளும் இல்லை. குறிப்பாக தூய்மை பணியாளர்கள் கூட நியமிக்கப்படவில்லை. இதனால் மருத்துவ கழிவுகளை அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பகுதியில் மொத்தமாக கொட்டி விடுவார்கள். இந்த கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் வந்து எடுத்து செல்வார்கள்.
கருச்சிதைவு பாகங்கள்
இந்த நிலையில் நேற்று அரசு ஆஸ்பத்திரி முன்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் மகப்பேறு பிரிவின் மருத்துவ கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் கருச்சிதைவின்போது வெளிவரும் சிசுவின் உடல் பாகங்கள் ரத்தம் படிந்த நிலையில் கிடந்தது. இதை மருத்துவ கழிவுகளை சேகரிக்க வந்த நகராட்சி தூய்மை பணியாளர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த கழிவுகளை அகற்ற மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எச்சரிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் மகேஷ் ஆனந்தியிடம், இதுபோன்ற மருத்துவ கழிவுகளை பொது இடத்தில் கொட்டக்கூடாது, அவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றமாட்டார்கள். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்த ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் மகேஷ் ஆனந்தி, இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தார்.