திருப்பூர்
18¾ லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை
|திருப்பூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 18¾ லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 18¾ லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
வருமுன் காப்போம் திட்டம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் காங்கயம் ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாமை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 400 பேரும், மக்களை தேடி மருத்துவத்தின் கீழ் 18 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 1 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ்அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் 1,298 பேர் பயனடைந்துள்ளனர்.
மகப்பேறு நிதியுதவி
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பேறுகால முன் கவனிப்பு, பிரசவம் மற்றும் அனைத்து தடுப்பூசிகளும் பெறப்படும் தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம், 5 தவணைகளாக வழங்கப்படுகிறது. ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. 2021- 2022 ம் ஆண்டில் 40 ஆயிரத்து 798 கர்ப்பிணி தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
2021-2022 -ம் ஆண்டு மற்றும் 2022-2023 ம் ஆண்டில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 மாணவ மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 7 ஆயிரத்து 286 கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மரு.ஜெகதீஷ்குமார், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார், துணை தலைவர் ஜீவிதா ஜவகர், காங்கயம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.