பெரம்பலூர்
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் 9-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு
|கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் 9-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் குழு கூட்டம் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் செல்வி சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மக்களை தேடி மருத்துவ ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மக்களை தேடி மருத்துவ களப்பணியாளர்களுக்கு பணி வரையறை தமிழக அரசு செய்ய வேண்டும். ஊதியம் பிரதி மாதம் 5-ந் தேதி வழங்க வேண்டும். ஊக்கத்தொகை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். சீருடை, அடையாள அட்டை, ரெயின் கோட் வழங்கிட வேண்டும். ஆன்லைன் தொடர்பான பணிகளுக்கு செல்போன் செலவு தொகை, பேட்டரி செலவு தொகை, காகிதம் முதலிய எழுது பொருட்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் மாத ஊதியமாக வழங்க வேண்டும். கவுரவமான பணி சூழலை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.