சென்னை
மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின: கல்லூரிகளில் 'ரோஜாப்பூ' கொடுத்து வரவேற்ற மூத்த மாணவர்கள்
|மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின. கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
நடப்பு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ, பல்மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் (ஆன்லைன்) நடத்தப்பட்டது. அரசு கல்லூரிகள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் இடங்கள் நிரப்பப்பட்டன.
அந்த வகையில் கலந்தாய்வு மூலம் மருத்துவ படிப்பில் இடங்கள் கிடைக்கப்பெற்ற மாணவ-மாணவிகள் அந்தந்த மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் 15-ந் தேதி (நேற்று) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். அந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கின.
மிகுந்த உற்சாகத்துடன், கண்களில் கனவுகள் மின்ன மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்களை ஏற்கனவே அங்கு சேர்ந்து படித்து வருகிற மூத்த மாணவ, மாணவிகள் ரோஜாப்பூ கொடுத்தும், சந்தனப்பொட்டு வைத்தும் வரவேற்ற நிகழ்வு பல கல்லூரிகளில் அரங்கேறியது. சில கல்லூரிகளில் இனிப்புகளும், வாழ்த்து அட்டைகளும் வழங்கி வரவேற்றனர். மேலும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களும் இன்முகத்துடன் மாணவ-மாணவிகளை வரவேற்று மகிழ்ந்தனர்.
சென்னையைப் பொறுத்தவரையில், சென்னை அரசு மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி, இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கினாலும், இந்த வாரம் முழுவதும் அறிமுக வகுப்புகளாகவே நடத்தப்பட இருக்கின்றன. இதில் மாணவ-மாணவிகள் தங்களை அறிமுகம் செய்து கொள்வது, தேர்வு செய்திருக்கும் படிப்பு சார்ந்த விளக்கங்கள், படிக்கும் போது என்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்பட அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து பாடம் சார்ந்த வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப் போன்ற மருத்துவ படிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, மாணவ-மாணவிகள் மத்தியில் 'ராக்கிங்' என்ற வார்த்தை இருக்கவே கூடாது. அவ்வாறு ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.