பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1.6 லட்சம் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
|இந்த மருத்துவ முகாமில் 16 வகையான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைப்படி, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை அறிக்கையினை வழங்கினார்கள். இவ்விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் ஜெ.குமரகுருபரன், முன்னிலை வகித்தார்.
முதல்-அமைச்சர் 01.03.2023 நாளிட்ட செய்தி வெளியீட்டில், மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண, அயராது உழைக்கும் ஆசிரிய பெருமக்களின் உடல்நலம் காக்க, அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் மருத்துவ பரிசோதனைத் திட்டம் செய்யப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய தினம் அமைச்சர்களால், 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் உயர் இரத்த அழுத்த பரிசோதனை, நீரழிவு நோய் பரிசோதனை, இசிஜி பரிசோதனை உள்ளிட்ட 16 வகையான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் 1,06,985 ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்.