< Back
மாநில செய்திகள்
திருநின்றவூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
மாநில செய்திகள்

திருநின்றவூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
21 July 2024 3:35 AM IST

திருநின்றவூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி,

தருமபுரி மாவட்டம் அதங்கம்பாடி அடுத்த ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஆனந்தன் (21 வயது). திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் தேவி நகர் பகுதியில் கல்லூரி நண்பர்கள் 4 பேருடன் தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். இவருடன் தங்கி இருந்த நண்பர்களில் இருவர் ஊருக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ஆனந்தன் மற்றும் அவரது நண்பர் சண்முகம் ஆகிய இருவர் மட்டும் அறையில் தங்கி இருந்தனர்.

நேற்று முன்தினம் காலை ஆனந்தன் தனது தாயாருக்கு போன் செய்து தனக்கு உடல் நலம் சரியில்லை நான் ஊருக்கு புறப்பட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் ஆனந்தன் கல்லூரிக்கு சென்றார். 2 மணி நேரம் மட்டுமே கல்லூரியில் இருந்த ஆனந்தன் ஆசிரியரிடம் தனக்கு உடம்பு சரி இல்லை என்று கூறி காலை 11 மணிக்கு விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு தான் தங்கி இருந்த அறைக்கு வந்து விட்டார்.

அவருடன் தங்கி இருந்த சண்முகம் கல்லூரி முடிந்து மாலை வீட்டுக்கு வந்தபோது உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் சண்முகம் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது ஆனந்தன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று தற்கொலை செய்து கொண்ட ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்