< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
16 May 2024 12:51 PM IST

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை,

வடசென்னை கொருக்குப்பேட்டை கே.கே.நகரை சேர்ந்தவர் தனுஷ் (வயது 23). இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். தனுஷ் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் எனக்கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து வந்த போதிலும், இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக தொடர்ந்து விளையாடி வந்திருக்கிறார் தனுஷ்.

இந்த நிலையில், தனுஷ் தனது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் பணம் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தனுஷின் தந்தை ரூ.4 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். இதையடுத்து 4 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு தனது அறைக்கு சென்ற தனுஷ் கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தனுஷின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது தனுஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து தனுஷ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து தனுஷின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்