< Back
மாநில செய்திகள்
கோனேரிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கோனேரிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
21 July 2022 7:32 PM GMT

கோனேரிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன. அதன்படி பெரம்பலூர் வட்டாரத்திற்குட்பட்ட கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமை தாங்கினார். முகாமிற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகளை டாக்டர்கள் பரிசோதித்து உதவி உபகரணங்கள், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு, உதவி தொகை வழங்க பரிந்துரை செய்தனர். இதில் 46 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் வழங்கப்பட்டன. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கு 9 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் உபகரணங்கள் வழங்குவதற்கு 2 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வங்கி கடன் வழங்க ஒரு மாற்றுத்திறனாளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை வழங்குவதற்கு 4 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தெரிவித்தார்.

இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்றும் (வெள்ளிக்கிழமை), கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-ந்தேதியும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 27-ந்தேதியும், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 28-ந்தேதியும், வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29-ந்தேதியும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந்தேதியும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெறுகின்றன. எனவே முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்