< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை இலவச பல்நோக்கு  சிறப்பு மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
22 Jun 2023 7:30 PM GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 4 இடங்களில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி கலெக்டர் சரயு தலைமையில் காணொலி காட்சி மூலம் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 4 இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் காமராஜ் காலனி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.

காப்பீடு அட்டை

இதில் தொற்றா நோய்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக மற்றும் கர்ப்பபை, வாய் புற்றுநோய் சிகிச்சை, பொது மருத்துவம், இ.சி.ஜி. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் போன்ற சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்பட உள்ளது. மேலும் சித்தா மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் பங்கேற்று மேல் சிகிச்சை தேவைப்படுவோர்க்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படும். காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கப்படும். குறிப்பாக தூய்மை பணியாளர்களை அனைவருக்கும் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்க செய்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

மலைக்கிராம மக்கள்

தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி போன்ற மலைக்கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களையும் இந்த முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும். இதற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உரிய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் சையதுஅலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்