< Back
மாநில செய்திகள்
தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
23 March 2023 7:42 PM GMT

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தஞ்சை மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் 3 கட்டமாக நடத்தப்படுகிறது.

அதன்படி 3-ம் கட்டமாக தஞ்சை மற்றும் கும்பகோணம் அரசு பொது ஆஸ்பத்திரிகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம், தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகிறது.

சிறப்பு நிபுணர்கள்

சிறப்பு மருத்துவ முகாமில் சிறுநீர்ப்பை பாதிப்பு தொடர்பான நவீன சிகிச்சை, ரத்தவகை கண்டறிதல், கண் மற்றும் பல் பரிசோதனை, எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நாகரசம்பேட்டை மற்றும் விசலூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார். திருநறையூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் களம், சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பூர்ணிமா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் திலகம், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) நமச்சிவாயம், திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் சுபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்